அரியின் கவிதைகள் (1)

1. நீளுகிறது ஏக்கம்

கிடைக்குமா என்பதிலிருந்து
கிடைத்தது நிலைக்குமா என்பதுவரை
“நீளுகிறது ஏக்கம்”

பணம் படைத்தோர் எளிதில்
பெரும் இன்பத்தை - நல்ல
மனம் படைத்தோர் துன்பப்பட்டுதான் பெறவேண்டுமா என
“நீளுகிறது ஏக்கம்”

கணம் கணம் - தந்தை
வியர்வை சிந்தினால்தான்
தினம் தினம் என் வாழ்க்கையா என
“நீளுகிறது ஏக்கம்”

தோழனின் தோளில் தோள்
சாய்ந்து கொண்டாலும்
தேளதின் விடமாய் வலிக்காமல் வலித்து
“நீளுகிறது ஏக்கம்”

ஏதும் இல்லானாய்
எல்லாம் உள்ளானாய்
இருந்தபோதிலும்
என்னை தனிமையில் விட மனமில்லாமல்
என்னோடு “நீளுகிறது ஏக்கம்”

2. காதல்

குளிர்மழைச் சாரலின்
வெளிர் மின்னொளியொன்று
தளிருடல் கன்னிமுகம்
தரிசிக்கச் செய்தது!

கண்கள் தரிசித்தன! - அவள்
கன்னங்களோ எனை பரிகசித்தன!
எண்ணங்கள் எழும்பின! - அவள்
என்னில்லம் புகுவாளோவென!

தூக்கமும் போனது! - அது அவள் தந்த
தாக்கமென ஆனது!
ஏக்கமும் நிறைந்தது! - அவள்
என்னவள் ஆவாளோ என!

கனவிலும் வருபவள் - என்னிடம்
கணவா என வருவாளோ?
மனதினுள் நிறைந்தவள் - என்னுடன்
மணமேடை உறைவாளோ?

கேள்விகளெனும்
வேள்வியில் வளர்ந்துவிட்டது அது!
“காதல்”

3. அவள்

அவள் ஓர் அக்கறை….
தித்திக்கும் அவள் வார்த்தைகளோ சர்க்கரை….
இரவின் அடர் காரொளியில்
இறவாத அவள் நினைவுகள்….
தனிமை தங்கும் தருணத்தை
இனிமை பொங்கவைத்தவள்….
பஞ்சை மிஞ்சிடும் - அவள்
கொஞ்சும் கைகள்…. அதில்
பாதி உயிர் பறிக்க
பத்து விரல்கள்…. முத்து விரல்கள்….
மீதி உயிரை மீன்விழிகள் உண்டிடும்….
என் உயிரை உண்டவள்
உடலை மட்டும் தனித்து விட்டதேனோ…
கல்லிடையில் தங்கும் பாசி போர்வைபோல் - அவள்
மெல்லிடையில் தங்கும் என் பார்வை போர்வை…
பார்த்ததும் ஈர்த்திடும் ஈர உதடுகள்… - ஈர்த்தன
என் வீர உதடுகளை….
தூரத்தில் அவள் வந்தாளும், நெஞ்சில் நங்
கூரத்தை பாய்க்கும் நடை….
பூக்களின் மென்மையை தேடுபவள் இந்த
ஆணின் இறுக்கத்தை நாடுவாளோ….
ஏக்கத்தின் உச்சியில் அரவிந்தன்….

4. உனக்கெனவே நான்…

வெண்ணிலவை சாட்சியாகக் கொண்டு
பெண்ணொருத்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன்…
முன்னிருந்த நொடித்துகள் வரை,
உன்னொருத்தனைப்போல் கண்டதில்லை என்றாள்…

கண்ததும்பி நின்றாள் காதலையும் வளர்த்து…
பெண்ணவளிடம் எப்படி உரைப்பேன்…
முன்னொருத்தி முகம்பார்த்து
முயங்கிப்போனவன் நானென்று!

அந்த “கொடுத்து வைத்தவன்” நானில்லை என்று
அவள் கண்துடைத்து விடைபெற்றேன்…
இதயத்தை “என்னவளிடம் மட்டுமே
கொடுத்து வைத்தவன்” நான் என்பதால்…

வெண்ணிலவு வேகமாய் சென்று,
என்னவளிடம் கூறியது…
பெண்ணினத்தில் நீயன்றி
இன்னொருத்தி - உன் “கண்ணனுக்கு இல்லையடி…”

5. நதி

கன்னடம் தோன்றியவள் தென்னகம் விரைந்தாள்!
கண்ணனை அரங்கத்தில் கண்குளிர கண்டவள்,
பெண்ணெனை அணைப்பாய்
மன்னாவென சூழ்ந்தாள்! - காவேரி

கேரளம் பிறந்தவள், சேரளம் புகுந்தாள்!
தெங்குநீர் சுவைக்காரி கொங்குசீர் சகிதசாரி!
பாவையவள் விழுந்தாள்,
கோவையில் குற்றாலமாய்! - சிறுவாணி

தென்பொதிகை உதித்தவள்,
தென்றல் குளிரில் முணங்கினாள்!
விண்தாண்டி வந்தவள்
தென்பாண்டியை அணைத்தாள்!
எல்லையில்லா பாசத்தோடு
நெல்லையெல்லாம் பாய்ந்தாள்! - தாமிரபரணி

6. அண்ணன் தங்கை

கண்ணில் தூசு பட்டால்
அண்ணே என துடிப்பாள்! - ஒரு
பெண்ணில் என் கண்பட்டால்
கண்ணிலேயே அடிப்பாள்!

கோவத்தில் முகந்திருப்பி
பேசாதது போல் நடிப்பாள்!
பாவம்போல் முகம்வைத்தால்
பக்கம்வந்து அணைப்பாள்!

அழுதாருமின்றி இருக்கையில்
அன்னையாய் தேற்றுவாள்…
தொழுதொழுகும் நேரத்தில்
அண்ணனுக்காய் வேண்டிடுவாள்…

மறுவீடு செல்லுகையில் என் மனத்தில் ஒருபங்கு மரிக்கும்!
இதுவரை சரியாக கண்டுகொள்ளப்படாத அவள் முகம்…
வந்து வந்து “அண்ணே” என அழைக்கும்…
தங்கை! என் உதிரம் கொண்ட தங்கமங்கை…

7. குழப்பம்

தென்காசியில் ஒரு மாலை பொழுது…
வழக்கம்போல சாரல் காற்று தூரலிட்டுக்கொண்டிருந்தது…
அலுவலக பையோடு நெல்லை மார்க்கமாக செல்லும்
பேருந்துகள் நிற்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்…
ஏனென்று தெரியவில்லை…
நான் இடதுபக்கம் பாரத்துக்கொண்டே நகர்ந்துகொண்டிருந்தேன்…
திடீரென்று ஒரு கைத்தட்டும் சத்தம்…
திரும்பி பார்த்தால் ஓர் ஆணுருவில் பெண்மை சிரித்துக்கொண்டிருந்தது…
“என்னல… பொண்ணுவள சைட் அடிச்சுட்டே வாரியோ…” என
நக்கலாய் கேட்க, “ஆமாக்கா… நான் தான் பாக்கேன்…
என்ன ஒரு பொண்ணுவளும் பாக்க மாட்டுக்கு…” என
நானும் சிரித்து கூறினேன்.
“பாக்காது… ஒன்ன என்ன தவற ஒரு பொண்ணுவளும் பாக்காது…” என
சிரித்து கூறியபடியே அந்த கைத்தட்டல் சத்தம் மற்றொருவரிடம் நகர்ந்தது…
சிரிப்பதா… பரிதவிப்பதா…
குழப்பத்தில் அரி…