கூப்பனிப்பு

எங்கள் ஊர் ஆலங்குளம் (தென்காசி, திருநெல்வேலிக்கு இடையே) அருகேயுள்ள காட்டூர் எனப்படும் சுப்ரமணியபுரம்… சுற்று வட்டாரங்களில் எங்கும் காணப்படாதது போன்ற பாறை அமைப்புகளும் அடர்ந்த காட்டு மரங்களும் சூழ்ந்திருப்பதினாலேயே இப்பெயரோ என்னவோ…

Kattoor தென்காசியில் நான் வேலை பார்க்கும் மென்பொருள் நிறுவனத்தின் அருகாமையில் இருந்த கடையில், நானும் என் கல்லூரி Junior தம்பிகளும் Coffee குடித்துக்கொண்டிருந்தோம்… விளையாட்டாக நான், “நாங்கல்லாம் நாசூக்கா, சத்தம் வராம பொறுமையா காப்பி குடிக்கிறவங்க” என சிரித்தவாறே கூறினேன்… உடனே என் தம்பி கரண், “நீங்க ஒங்க ஊருல பொறி கடலையையும் மொறுக்கையும் கடுங்காப்பிக்கில போட்டு குடிக்க கூட்டம் தான” என்றான்…

அடடே… அவன் சொன்னது முற்றிலும் சரி தான்… தேங்காயை திருவி போட்டு கடுங்காப்பி குடிப்பது, பச்சரிசியை ஊறப்போட்டு கடுங்காப்பி குடிப்பது, அவன் சொன்னது போல பொறி கடலையை போட்டு கடுங்காப்பி குடிப்பது, எடை முறுக்கை ஒடித்து ஊறப்போட்டு கடுங்காப்பி குடிப்பது என இவையெல்லாம் எங்கள் ஊரின் வாடிக்கைகள்…

சிலமுறை நான் Juice குடிக்கும்போது வரும் சத்தத்தையும் இந்த கரண் கேலி செய்வதுண்டு… “முன்ன பின்ன Juice குடிக்காதவன் மாதிரி குடிக்காதீங்க காட்டூர் சார்வாள்” என்பான்…

சரி போகட்டும்… அன்று காப்பி குடிக்கும்போது, அதில் இனிப்பு அதிகமாக இருந்தது. உடனே என்னை அறியாமலேயே, “கூப்பனிப்பா இருக்குடா” என்றுவிட்டேன்… அவன் உடனே, “அப்டினா?” என்றான். ஆமாம்… அப்படியென்றால் என்ன பொருள்? சிறு வயதில் இருந்தே எங்கள் ஊரில் நான் கேட்டு வளர்ந்த சொல் அது… அதிக இனிப்பான ஒன்றை சாப்பிட்டுவிட்டோம் என்றால் உடனடியாக, கூப்பனிப்பா இருக்கு என்றுவிடுவது எங்கள் வழக்கம்… இந்த சொல்லின் மூலம்தான் என்ன? எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என தேடலை தொடர்ந்தேன்… இதன் மூலத்தை கண்டறியும்போதுதான், பெருமகிழ்ச்சி…

தென்னகத்தில், அண்ணியை பொதுவாக மதனி என்பது வாடிக்கை… ஆனால் ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் மயினி எனும் சொல் புழக்கத்தில் இருப்பதை அறியமுடியும்… நானறிய, சங்கரன்கோயில் பகுதியில், மதனி எனும் சொல் வாடிக்கையில் உள்ளது…

அது போல தான், பதநீர் எனப்படும் பதனியும்… எங்கள் ஊர் பகுதியில் பயினி என வழங்கப்பெறுகிறது…

சாலையில் எங்காவது சுற்றும்போது, ஓரத்தில் பயினியை பார்த்தால் போதும்… வேகமாக விரைந்து, பனையோலைப்பட்டையை இருகை இறுக்கிப்பிடிக்க, உடல்நிறைந்த Arector Pili தசைகள் செயல்பட்டு புல்லரிப்பு ஏற்பட, சொம்பில் கோதி ஊற்றும்போது வரும் வாசத்தை நுகர்ந்தவாறே, மனம் விரையும்… பயினி தெறைந்துபோனதாக (காலம் கடந்து புளித்த பயினி) இருந்தாலும், அதிலும் கூட என் நாக்கு ஒரு தனி சுவையை கண்டு வைத்துள்ளது… பயினியில் நுங்கு போட்டு குடிப்பதெல்லாம் இப்போதுதான் செய்கிறார்கள்…

இந்த பயினி தருவதுதான் கூப்பனிப்பு எனும், தென்னகத்தில் மட்டுமேயுள்ள ஏழாம் சுவை.. பயினியை இறக்கியதும், அதை சுமார் மூன்று மணி நேரம் காய்த்தால் கிடைப்பதுதான் கருப்பட்டி… எழுதும் போதே நாக்கில் போதை எழுகிறது… 😋🤤

கருப்பட்டி ஆகவிடாமல், பிசின் போன்ற ஒரு நிலையை பயினி எட்டியிருக்கும்போது, அதற்கு பெயர், கூப்பினி எனப்படும் கூப்பயினி… இந்த கூப்பயினியின் சுவை, அவ்வளவு இனிப்பாகவும் பனையின் மணத்துடனும் இருக்கும்…

இச்சுவைக்கு உருகார்…. எச்சுவைக்கும் உருகார்… அத்தகைய சுவை அது… 🫠 ஒன்றன் இனிப்பை “தேனா இருக்கு” என்பதுபோல, “கூப்பயினியா இருக்கு” என உவமையாக ஆரம்பித்த வழக்கம் இன்று “கூப்பனிப்பு” என்றாகியுள்ளது…

இந்த கூப்பயினியின் இனிப்பை உணர்ந்த எனது ஊரார்கள், இன்றும் அதை நினைவு கூறும் விதமாக, அவ்வப்போது அந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்… நானும் தான் அறியாமலேயே பலமுறை பயன்படுத்தியுள்ளேன்… இனியும் பயன்படுத்துவேன்…

என் தாத்தா பனையேறும் காலத்திலேயே, இந்த சொல் பிறந்திருக்கலாம் என எண்ணுகிறேன்… சொற்கள் ஒரு பாரம்பரியத்தையே தாங்கி நிற்கும் கூப்பனிப்பை சுவையுங்கள்!