ஜெயன் விஜயன்

தமிழர் வழிபாட்டு தலங்களில், மிகவும் பிரம்மிப்பூட்டும் சிற்பங்கள் அமையப்பெற்றிருக்கும். உதாரணமாக, திருநெல்வேலியிலுள்ள, நெல்லையப்பர் கோயில் வளாகத்தை ரசனை மனத்துடன் சுற்றினால், வாய்திறந்து விழிக்கும் வண்ணம், வாகான வேலைப்பாடுகள்! சிவமாக நெல்லையப்பர் இருக்க, அவர் அருகாமையில், நெல்லை கோவிந்தர் இருப்பதும் (படுத்து) சற்று வியப்பு தான்.

திருச்செந்தூர் கோயிலும், ஒரே கற்களினால் ஆன பல வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றது. கல்லா இல்லை களிமண்ணா? இப்படியெல்லாம் விளையாடியுள்ளார்களே என மனம் நம்மிடம் கேக்கும்! சிலர், இவற்றை மனிதர்கள் கட்டியிருக்க முடியாது! தேவர்களும், பூதங்களும் தான் கட்டின என்று கூறுவதுண்டு. இன்னும் சிலர், GENERIC-ஆக, Alien-கள் தான் கட்டின என்றும் கூறுவதுண்டு.

என்னை பொறுத்தவரையில், இவை நம் முன்னோர்களால் உண்டானவையே அன்றி, வேறாராலும் இல்லை. அவர்கள் கொண்டிருந்த பலவற்றை இன்று நாம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் கொண்டிருந்த திறமைகள், இன்னமும் நம் மரபணுக்களில் மறைந்து கிடக்கின்றன. எனவே தான், அவர்களின் வேலைப்பாடுகள், அதிசயமாக தோன்றினாலும், ஏதோ ஒரு வகையில் நமக்கு பரிட்சயம் போன்ற ஒரு எண்ணமும் மனத்தில் வருவதுண்டு.

இது போல, பல கோயில்கள், நம் முன்னோர்கள் தீட்டிய கலையரங்கங்களாக இருந்து, வளரும் தலைமுறையினருக்கு, பெருத்த அதிசயத்தை மனத்தில் தேக்கும் வண்ணம் உள்ளன.

கல் தூணை தட்டினால் கம்பி போல சத்தம் கிளம்பும் வண்ணம் அதிசயங்கள் நிறைந்துள்ளன அவர்களின் கலைகளில்.

சிறு வயதில் கேட்டும், ஆராய்ந்தும், உணர்ந்த ஒரு விடயமே, இக்கட்டுரையின் மையமாகும். ஜெயனும் விஜயனும்!

பெரும்பாலும், பெருமாள் என்ற நாராயணன், படுத்திருக்கும் எந்த கருவறைக்கு முன்னரும், இவர்கள் இருவரையும் காண முடியும். சில வாயில்களில் சிரித்த வண்ணம் நின்றிருப்பர். சில வாயில்களில், “கர்த்தர் வாயிலிருந்து, கருக்கு பட்டயம் கிளம்புவது போல (Revelation 1:16)”, இரண்டு கூரான பற்களை காட்டிய வண்ணம், கோபத்துடன் நிற்பர். சில வாயில்களில் ஆட்காட்டி விரலை காட்டியவாறு, அதட்டிக்கொண்டு நிற்பர். இவர்கள், வாயிற்காவலர்களே தான்! துவார பாலகர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

வைணவ கோயில்களில் இருக்கும் துவார பாலகர்களுக்கு, ஜெயன் மற்றும் விஜயன் என பெயர். சைவ கோயில்களில் இருப்பவர்களுக்கு, சண்டன் மற்றும் பிரசண்டன் என பெயர். இப்போது புரிகிறதா, பிரசாந்த் என்ற பெயர் யாருடையது என்று? சக்தி ஆலயங்களில், இரு பெண்கள், வாயில் காவலர்களாக இருப்பார்கள். இவர்களை, துவார சக்திகள் என்று அழைப்பர். அரபத்ரா மற்றும் சுபத்ரா என்பது, இவர்களின் பெயர்கள்.

சிறு வயதில், என்றோ ஒரு நாள், பைபிளின் ஆதியாகமத்தில் கண் பதித்திருந்த போது, கேருபீன்களை பற்றிய ஒரு வசனம் வந்தது (GENESIS 3:24).

ஜீவ விருட்சத்திற்கு யாரும் போகாத படி, கர்த்தரால் இவர்கள் காவலுக்கு நிர்ணயிக்கப்பட்டவர்கள்; ஜெயன்-விஜயனை ஒத்தவர்கள்.

பெரும்பாலும், ஒரு காலை தூக்கி, நடராஜ பெருமானை போல, ஓர் அமைவு முறையில் இவர்கள் நிற்பதை காணலாம். இவர்களது சிற்பம் உணர்த்தும் தத்துவத்தையே இங்கு எழுதுகிறேன். இவர்கள் தூக்கிய காலும், தாக்கிய பார்வையாக நின்றிருப்பர்.

இவர்களது மூட்டுகளுக்கு கீழே, ஒரு கதாயுதத்தை வைத்திருப்பர். அந்த கதாயுதத்தில், ஒரு பாம்பு சுற்றியிருக்கும். பாம்பு என்றதும், ஏதேன் தோட்டத்துக்கு மனம் போகக்கூடாது.

இந்த பாம்பின் வாயில், ஒரு யானை இருக்கும். ஆம்! அந்த பாம்பு, ஒரு மிகப்பெரிய அனகோண்டா தான்!

எதனால் இப்படி ஒரு சிற்பம்? சிலர், தமிழரின் பழங்கால ஆன்ம மார்க்கமாக இருந்த, ஆசீவகத்தை, இந்து மதம் அழித்ததை குறிக்கவே இப்படி ஒரு சிற்பம் என்பர். ஆசீவகத்தின் சின்னம், யானை. அது, சித்தர்களின் உருவகம். பிள்ளையாரும் கூட, பல சித்தர்களின் உருவகமே! ஆனால், கீழே வரும் விளக்கம், சற்று நன்றாகவும், ஏற்பானதாகவும் உள்ளது.

யானையையே அந்த பாம்பு விழுங்கும் என்றால், அந்த பாம்பு எவ்வளவு பெரியது என சிந்தியுங்கள். அந்த பாம்பை ஒரு கதாயுதத்தில், கயிறு போல சுற்ற முடியும் என்றால், அந்த கதை எவ்வளவு பெரியதென்று எண்ணுங்கள். அந்த கதையை, தமது மூட்டுகளுக்கு கீழே இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், இவர்கள் எவ்வளவு பெரியவர்கள் என எண்ணுங்கள். வெறும் வாயிற்காவலர்களே இவ்வளவு பெரியவர்கள் என்றால், அவர்கள் கரைபடியாது காத்து நிற்கும் அவர்களது முதலாளியான, கருவறை நிறையும் இறைவன், எவ்வளவு பெரியவன் என எண்ணுங்கள். ஆம்! தமிழர் வாழ்வியல், இறையியலுக்கு பெரும் முக்கியத்துவம் தருகின்றது.

வெறும் சிற்பங்களால், இவ்வளவு பெரிய கருத்தியலை, நம்மவர்களால் மட்டுமே உணர்த்த முடியும். அவர்கள் சிற்பிகள் மட்டுமல்ல! சிந்தனை சிற்பிகள்! நம்மிடம், இத்தகு சிந்தனை வீரியம் உள்ளதா?

இப்படி யோசித்தால், எப்படித்தான் சோம்பலுடன் ஓய்ந்திருப்பது? புத்தகங்களை புரட்டி, பெருவெளியில் நம் தீண்டலுக்காக காத்துக்கிடக்கும் புது புது விடயங்களையெல்லாம் தொட்டு, உணர்ந்து, உலகில் வெளிப்படுத்தி, பல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி, அவர்கள் மீண்டு வரும் முன்னரே மறுபடியும் வியப்பில் ஆழ்த்த தான் மனம் விரையும்!

சிறுமையின் சிற்றறிவு, சிற்றின்பத்தில் சிக்காமல், பெருமையின் பேரறிவு, பேரின்பத்தை நோக்கி மனத்தை செலுத்துவோம்! இவ்வறிவே, வள்ளுவர் கூறும் வாலறிவு!

நன்றி